22 மாத திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று மாலை 6 மணிக்கு பிரச்சாரம் நிறைவடைந்தது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 22 மாத திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை. 22 மாதத்தில் ஈரோட்டுக்கு ஒரு துரும்பை கூட திமுக அரசு கிள்ளிப்போடவில்லை. ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஈரோட்டுக்கு என்ன செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் கோடநாடுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. கோடநாடு பற்றி ஸ்டாலின் பேசுகிறார். கோடநாடு விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளை அதிமுக கைது செய்தது. குற்றவாளிகளை திமுக ஜாமீனில் எடுக்கிறது.
கோடநாடு என்று பூச்சாண்டி காட்டும் வேலை எங்களுக்கு வேண்டாம். திமுகவிற்கு, கோடநாடு குற்றவாளிகளுக்கும் சம்பந்தம் உள்ளதாக மக்கள் சந்தேகப்படுகின்றனர். இது மர்மமாக உள்ளது. விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.
அண்மைச் செய்தி: ”தேர்தல் நேரத்தில் சொன்ன எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்” – இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின்
தென்னரசு எம்எல்ஏவாக இருந்தபோது பல சாதனைகள் செய்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோட்டுக்கு 484 கோடி மதிப்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுத்தோம். ஈரோடு போக்குவரத்து நெரிசல் குறைப்பதற்கு பாலம் கட்டினோம். 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தியுள்ளோம். 61 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கருவிகள் வாங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.







