சென்னை, தாம்பரம் மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் திருடு போன செல்போன்களை தொடர்ந்து கண்காணித்து, அதனை மீட்டு தனி படை காவல் துறையினர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், துணை ஆணையர் அதிவீர பாண்டியன் மற்றும் உதவி ஆணையர் ஜெயராஜ் ஆகியோர் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழு ஒன்று திருடுபோன செல்போனுகளை பறிமுதல் செய்ய அமைக்கப்பட்டது.
தீவிர முயற்சியில் ஈடுப்பட்ட இக்குழுவினர்கள், கூடுவாஞ்சேரி , மறைமலைநகர், பீர்க்கங்காரணை மற்றும் ஓட்டேரி உள்ளிட்ட நான்கு காவல் நிலையங்களில் திருடுபோன வழக்குகளில் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான 102 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் குறித்து உரியவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், அவர்களிடம் இருந்து முறையான ஆவணங்களை பெற்றுக் கொண்டு, கூடுவாஞ்சேரி டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து அனைவரிடமும்
செல்போன்களை ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, துணை ஆணையர் அதிவீர பாண்டியன் கூறுகையில், “வீடுகளில் தூங்கும் போது கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கக்கூடாது, வெளியூர் செல்லும் போது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். அதே போல், வெளியூர் செல்லும்போது வாசல் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு செல்லவும், இதை கடைபிடத்தால் திருட்டு சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது” என கூறினார்.







