நடிகை ராஷ்மிகா மந்தனா தனக்கும் தன்னுடைய மேலாளருக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை எனவும், இந்த பிரிவு சுமூகமானது தான் என்றும் அவரே அறிக்கை ஒன்றை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைககளில் மிக முக்கியமானவர் ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்டி என்ற கன்னட திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், 2018-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கவனம் பெற்றார். கீதா கோவிந்தம் படத்தினை தொடர்ந்து தெலுங்கில் இதே ஆண்டில் செல்லோ, தேவதாஸ் ஆகிய படங்களிலும் நடித்தவருக்கு இந்த மூன்று படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தது மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த கனவு நாயகியாகவும் மாறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து ராஷ்மிகா தெலுங்கு திரையுலகில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானார். கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படத்தில் அறிமுகமானவர், பின்னர் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் , நடிகை ராஷ்மிகா மந்தனா ஆரம்ப காலக்கட்டதிலிருந்து நீண்ட நாட்களாக தனக்கு மேலாளராக இருந்தவர், அவரிடம் ரூ.80 லட்சத்தை மோசடி செய்து ஏமாற்றிவிட்டதாகவும், இப்படியான செயலில் ஈடுபட்டதை அறிந்ததும், அவரை பணியிலிருந்து உடனடியாக நீக்கி நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதுகுறித்து யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.
பின்னர் இந்த தகவல் தவறானது மற்றும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று ராஷ்மிகா மந்தனாவின் நட்பு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நடிகை ராஷ்மிகாவே அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டு உள்ளார். அதன்படி, தனக்கும் தன்னுடைய மேலாளருக்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை எனவும், இந்த பிரிவு சுமூகமானது தான் நாங்கள் இருவரும் இனிமேல் சுதந்திரமாக வேலை செய்ய முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும், எங்கள் பிரிவை பற்றி பரவும் வதந்திகள் எதுவும் உண்மையில்லை எனக்கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ராஷ்மிகா, மேலாளருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலிலும் உண்மை இல்லை என அறிவித்துள்ளார். இவ்வாறு தனது மேலாளருடனான பிரிவு குறித்து நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜேம்ஸ் லிசா