முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, கோடைகால மின்வெட்டு தொடர்பாக அதிமுக, பாமக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் தங்கமணி, அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் விவசாயிகளின் மோட்டார்களில் பழுது ஏற்படுவதாக தெரிவித்தார். எனவே, வருங்காலத்தில் மின்வெட்டு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 6 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோடைகாலத்தில் அதிகரிக்கும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், தமிழ்நாட்டுக்கு தினசரி 17 ஆயிரத்து 196 மெகாவாட் மின்சாரம் தேவையாக உள்ளதாக குறிப்பிட்டார்.
கோடை காலத்தில் தினசரி 2 ஆயிரத்து 500 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஏப்ரல் மாதத்துக்கு கூடுதலாக 3 ஆயிரத்து 47 மெகா வாட் மின்சாரமும், மே மாதத்திற்கு 3 ஆயிரத்து 7 மெகா வாட் மின்சாரத்தையும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நிலக்கரி பற்றாக்குறையைப் போக்க 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்தார்