கடந்த செப். 27ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த நவ.25-ம் தேதி தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.
இவர்களுடன், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. மதியழகன், எம்.சி. பவுன்ராஜ் ஆகியோரும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர். டிச.4-ம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்மனை ஏற்று சிபிஐ முன் ஆஜர் ஆவதற்காக தவெக தலைவர் விஜய் நேற்று தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றடைந்தார். தொடர்ந்து, அவர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் சுமார் 11.30 மணியளில் விசாரணைக்கு ஆஜரானார். விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.
இந்தநிலையில், தவெக தலைவர் விஜயிடம் இன்று நடைபெறுவதாக இருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜயின் கோரிக்கையை ஏற்று விசாரணையை சிபிஐ ஒத்திவைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று சென்னை திரும்புவார் என தவெகவினர் தரப்பில் கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு பின் மீண்டும் விஜயிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.







