“முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும்”

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு…

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் ஏற்புடையதாக இல்லை என குறிப்பிட்டார். முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மரம் வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி கொடுத்ததாக செய்தி வந்த மறுநாளே அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். முல்லைப்பெரியாறில் கேரள அரசு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வது வருகிறது எனக்கூறிய அவர், கேரள அரசுடனான நல்ல நட்பை பயன்படுத்தி முல்லைப்பெரியாறு அணையின் கொள்ளளவை 152 அடியாக உயர்த்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணைகளின் பாதுகாப்பு தொடர்பான அனைத்தையும் மேற்கொள்ள அணை பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறினார். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும் என தெரிவித்த அவர், முல்லைப்பெரியாறு அணையை பாதுகாப்பதும், பராமரிப்பதும் தமிழ்நாடு அரசு தான் என குறிப்பிட்டார். விரைவில் அணை பாதுகாப்பு சட்டம் வரவுள்ளதால் அதுவரை நாம் காத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாடு – கேரளா இணைந்து சூப்பர்வைசரி குழுவை அமைத்துள்ளதாகவும், அந்த குழுவில் நாம் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்ட வல்லுநர்களுடன் ஆராய்ந்த பின், வேறு வழியில்லாமல் இந்த குழுவில் சேர்ந்துள்ளதாக கூறிய அமைச்சர் துரைமுருகன், முல்லைப்பெரியாறு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.