‘பராசக்தி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த ரவி மோகன்!

‘பராசக்தி’ படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரவி மோகன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த், விஜய்க்கு பிறகு ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் வீடியோ ஜாக்கி, தொகுப்பாளர் என வளர்ந்து வந்த அவர் தனுஷின் 3 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மெரினா, எதிர்நீச்சல் என தனது திறமையான மற்றும் நகைச்சுவை கலந்த நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மதராஸி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, சிவாகார்த்திகேயன் இறுதிச்சுற்று, சூரரை போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கொராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரவி மோகன், அதர்வா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அளித்த அன்புக்கு நடிகர் ரவி மோகன் நன்றி தெரிவித்துள்ளார்.

https://x.com/iam_RaviMohan/status/2010743272894066971

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

“பல நல்ல உணர்வுகளை இப்போது அனுபவித்து வருகிறேன். பராசக்தி திரைப்படத்தில் ‘திரு’ கதாபாத்திரத்திற்கு நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் காரணமாகவே இது சாத்தியமானது. உங்களையெல்லாம் மீண்டும், புதிய புதிய முயற்சிகளுடன் விரைவில் சந்திக்க வருகிறேன். 2026 ஆம் ஆண்டு உங்களுக்கெல்லாம் மிகச் சிறப்பானதாக அமைய என் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெற்றி ரவி மோகனின் திரையுலகப் பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.