வேதாரண்யம் பகுதியில் 2வது நாளாக மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவில் சூறைகாற்றுடன் கனமழை பெய்தது வருகிறது. கடந்த 22 ஆம் தேதி இரவு 2மணி நேரத்தில் சுமார் 6.5 செமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் நேற்று இரவு ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ அளவுக்கு மழை பெய்தது .இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது இதனால் வாகன ஒட்டிகள் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
வேதாரண்யத்தில் பல பகுதிகளில் இரயில்வே சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நடைபாதையில் நடக்க முடியாமல் அவதியடையும் சூழல் ஏற்பட்டது. மேலும் குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது. அகஸ்தியன்பள்ளியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பு ஏற்றுமதி பணியும் அடியோடு முடங்கியுள்ளது .







