“ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை யாராலும் போற்றாமல் இருக்க முடியாது” – நயினார் நாகேந்திரன்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அவரது பொற்கால ஆட்சியை யாராலும் போற்றாமல் இருக்க முடியாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மக்களின் பேராதரவுடன் தனியொரு பெண்ணாக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தொடங்கி ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது வரை 360 டிகிரியிலும் மக்கள் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட, ‘அம்மா’ என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில், அவரது பொற்கால ஆட்சியை யாராலும் போற்றாமல் இருக்க முடியாது.

மாணவர்களுக்கு சைக்கில் முதல் லேப்டாப் வரை பல்வேறு பொருட்கள் வழங்கும் திட்டம், அம்மா உணவகம், தொட்டில் குழந்தைகள் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் என ஜெயலலிதா அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டங்களும், அதனால் முன்னேறிய மக்களும் ஏராளம். காலங்கள் மாறினாலும், அம்மாவின் சிறந்த ஆட்சியின் புகழ் என்றும் மறையாது.

அத்தகைய புகழ்மிக்க தமது ஆட்சியில் போக்குவரத்துத்துறை, ஊரகத்தொழில்கள் துறை, மின்சாரத்துறை மற்றும் தொழில்துறை என்ற நான்கு முக்கியத் துறைகளின் அமைச்சராக என்னைப் பொறுப்பேற்கச் செய்து மக்கள் பணி செய்ய வாய்ப்பளித்த அம்மா அவர்களை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து அகமகிழ்வேன்”! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.