தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன்களை வழங்க நிதி அதிகரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் சிறப்புக்கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் உயர் அலுவலர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், அரசு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்கள், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான அரசின் செயல்திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு உறுதுணையாக செயல்பட அழைப்பு விடுத்ததுடன், தொழில் திட்டங்களுக்கான கடன்களை விரைந்து வழங்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், சிறு, குறு & நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது, தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முடிவெடுப்பதில் தாமதத்தை தவிர்ப்பது உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் விவாதித்தார்.
இதனையடுத்து கூட்டத்தில் பேசிய அவர், “மக்களைக் காக்கவேண்டும் என்பதே அரசின் நோக்கம். நேற்றும், இன்றும், நாளையும் திமுக அரசின் ஒரே நோக்கம் இது ஒன்றுதான். இந்த நோக்கத்துக்கு வங்கிகளும் உதவ வேண்டும்.
மாநில அரசால் வகுக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயன்தர அரசுடன் வங்கிகள் இணைந்து செயல்பட வேண்டும். இந்த ஆண்டு வங்கிக் கடன் இணைப்புக்கு ரூ.20,000 கோடி இலக்கு உள்ளது. செப்டம்பர் 2021 வரை, ரூ.4,951 கோடி கடன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இலக்கை அடைய மீதமுள்ள தொகையையும் சேர்த்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை அதிகரிக்க மாநில அளவிலான கடன் உத்தரவாத நிதியை அரசு அளிக்கும்.” என்று கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.