முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியமில்லை: மத்திய அரசு

முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் கனமழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடிக்கும்…

முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில் கனமழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடிக்கும் கீழாக குறைக்க உத்தரவிடக்கோரி, ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனு விசாரணைக்கு வந்தபோது, முல்லைப்பெரியாறு கண்காணிப்பு குழு மற்றும் தமிழ்நாடு, கேரளா அரசுகளுடன் மத்திய நீர்வளத்துறை ஆணையம் ஆலோசனை நடத்தி உரிய பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி, மத்திய நீர்வளத்துறை ஆணையம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தற்போதைய நிலையில் அணையின் நீரின் அளவை குறைக்க தேவையில்லை என்றும், எனினும் உச்சநீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்தாலும் அதனை செயல்படுத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் அளவு தற்போது 137 அடியாக இருப்பதாகவும், 142 அடியாக நீரை தேக்கினாலும் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானது என ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதையும் தமிழ்நாடு அரசு சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அணையில் தற்போதைய நீர் தேக்கம் விவகாரம் குறித்த மத்திய நீர் வளத்துறை ஆணையத்தின் முடிவு தொடர்பாக மனுதாரர் மற்றும் கேரள அரசு சார்பில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மீண்டும் இந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.