“எந்த மொழியும் குறைந்தது இல்லை”- மத்திய அமைச்சர்

ஆங்கிலம், இந்தியை விட எந்த மொழியும் குறைந்தது இல்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.  பள்ளிக் கல்வி அமைச்சர்களின் 2 நாட்கள் தேசிய மாநாடு குஜராத்தின் காந்தி நகரில் நேற்று…

ஆங்கிலம், இந்தியை விட எந்த மொழியும் குறைந்தது இல்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். 

பள்ளிக் கல்வி அமைச்சர்களின் 2 நாட்கள் தேசிய மாநாடு குஜராத்தின் காந்தி நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டின் 2-வது நாளான நேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், சமீபகாலமாக பரவலாக மொழிப் பிரச்சனைகள் நிலவி வருகின்றன. குஜராத்தி, தமிழ், பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, மராத்தி என அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான். இந்தி அல்லது ஆங்கிலத்தை விட எந்த மொழியும் குறைவானது இல்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தேசியக் கல்விக் கொள்கையின் வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர். கே. கஸ்தூரிரங்கன், “உள்ளூர் மொழிகள்” அல்லது பழங்குடியின மொழிகள் போன்ற தாய்மொழிகளின் மீதுள்ள உணர்வுகளின் காரணமாக தேசிய கல்வி கொள்கையில் சேர்த்துள்ளாதாக குறிப்பிட்டார்.

புதிதாக பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்ற திட்டம் செயல்படுத்தபட உள்ளதாக கூறிய அவர், இது கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா போன்ற முன்மாதிரியான பள்ளிகளை விட ஒரு படி மேலே இருக்கும் என்று தெரிவித்தார்.

நாட்டில் மொத்தம் 15 லட்சம் பள்ளிகள் உள்ளன, அவற்றில் 11 லட்சம் அரசு பள்ளிகள். இவற்றில், 1% உங்களுடன் கலந்தாலோசித்த பிறகு உருவாக்கப்படும் புதிய திட்டத்தின் கீழ்பிஎம் ஸ்ரீ பள்ளிகளாக இருக்கும். பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கைக்கான ஆய்வகமாக இருக்கும். இது 21 ஆம் நூற்றாண்டின் இளைஞர்களை தயார்படுத்துவதற்கான அளவுகோல்களை அமைக்கும்.

கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில், 1 முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு சேனலை உள்ளடக்கிய 200 தொலைக்காட்சி சேனல்களை அறிமுகப்படுத்தவும், கல்வி நிகழ்ச்சிகளை உருவாக்கவும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.