நடிகை கேத்ரினா கைஃப் – விக்கி கவுசல் திருமணம் நேற்று பிரமாண்டமாக நடந்தது. அவர்களின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பிரபல இந்தி நடிகை கேத்ரினா கைஃப். 2003 ஆம் ஆண்டு வெளியான ’பூம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தி சினிமாவின் முன்னணி நடிகையான இவர், சல்மான் கான், ரன்பீர் கபூர் உள்பட சில ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். இந்நிலையில், நடிகை கேத்ரினாவும் இந்தி நடிகர் விக்கி கவுசலும் காதலித்து வந்தனர். விக்கி கவுசல், யுரி: த சர்ஜிக்கல் ஸ்டிரைக், மன்மரிஸியான், சஞ்சு, சர்தார் உத்தம் உட்பட சில படங்களில் நடித்துள்ள விக்கி, கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தில் அனுராக் காஷ்யப்பிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
நடிகை கேத்ரினா கைஃப் – விக்கி கவுசல் திருமணம் ராஜஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்சஸ் ஃபோர்ட் பர்வாராவில் நேற்று (டிசம்பர் 9 ) பிரமாண்டமாக நடந்தது. இந்த திருமணத்தில், அனுமதிக்கப்பட்ட இந்தி சினிமா பிரபலங்கள் மற்றும் மணமக்களின் உறவினர்கள் 120 பேர் கலந்துகொண்டனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இவர்கள் திருமணம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. திருமணம் நடந்த ஓட்டலை சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
இந்த திருமண விழாவை புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. திருமண விழாவை ஒளிபரப்ப, அமேசான் ஒடிடி நிறுவனம் பிரத்யேக உரிமையை சுமார் 100 ரூபாய்க்கு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக திருமணப் புகைப்படங்கள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங் களில் வைரலாகி வருகின்றன.








