எனக்கு நடிப்பதில் பெரிய விருப்பம் இல்லை என இயக்குநர் மிஷ்கின் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைத்துறையில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின். அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் எனத் தமிழ் திரைத்துறைக்கு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் ட்ரெண்ட்செட்டர் இயக்குநர்களில் ஒருவரானார். தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளர், நடிகர், பாடகர் என மிஷ்கின் பல அவதாரங்களையும் ஏற்கனவே எடுத்துள்ளார்.
இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக் கொண்டார். அவ்வபோது மேடைகளில் இளையராஜா பாடல்களைப் பாடுவதுடன், பாடகர்களுக்கான சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கு பெற்றார். இவர் தனது உடன்பிறந்த தம்பியும், ’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஆதித்யா இயக்கும் ’டெவில்’ எனும் திரைப்படத்தில் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
மேலும், நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். அவர் நடிப்பில் லியோ, மாவீரன் படங்கள் உருவாகியுள்ளன. மாவீரன் படத்தில் வில்லனாக நடித்துள்ள மிஷ்கினின் டிரைலர் காட்சிகள் வரவேற்பைப் பெற்ற நிலையில் நேர்காணல் ஒன்றில், “எனக்கு நடிப்பதில் பெரிய விருப்பம் இல்லை. சம்பளம் அதிகமாக குடுப்பதால் ஆண்டிற்கு 50 நாள்கள் நடித்தால் மட்டும் போதும் என்கிற மனநிலையில் இருக்கிறேன்” என மிஷ்கின் தெரிவித்துள்ளார்.







