மீன்வளத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு!

மீன்வளத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை இளைய தலைமுறையினர் உருவாக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.  சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா…

மீன்வளத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை இளைய தலைமுறையினர் உருவாக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக
வளாகத்தில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின்
எட்டாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தலைமை ஏற்று பட்டங்களை வழங்கினார்.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, தகவல் மற்றும்
ஒலிப்பரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் முதன்மை விருந்தினராக பங்கேற்று
சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் 3 பிரிவுகளில் 313 பேருக்கு இளங்கலை பட்டமும், 51 பேருக்கு முதுகலை பட்டமும், 22 பேருக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டன. முதல் மதிப்பெண் பெற்ற 15 மாணவர்களுக்கு விருதுகளுடன் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மொத்தம் 383 மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மேடையில் பேசியதாவது:

அதிக புரோட்டீன் உள்ள உணவு மீன் உணவுகள் தான். இந்தியாவில் 2.8 கோடி பேர்
மீன்வளம் சார்ந்த தொழிலில் உள்ளனர். உலகளவிலான மீன் உணவுத் தேவையில் 8%-ஐ
இந்தியா பூர்த்தி செய்கிறது. மீன்வளத் துறை ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில்
உள்ளது. நமக்கு போட்டியாக ஈக்குவாடர் என்ற சிறிய நாடு உள்ளது.

நம் பிரதமரின் எண்ணப்படி நம் உற்பத்தி பல நாடுகளுக்கு செல்லவேண்டும் என்பதை
கருத்தில் கொண்டு, வளர்ந்த நாடுகளுக்கு அதிகளவில் மீன் வள ஏற்றுமதியை நாம்
செய்து வருகிறோம். இந்தியாவில் மனித வளம் சிறப்பாக இருப்பதால் தான் பல நாடுகளிலும் நாம் சிறப்பான பதவிகளை பிடித்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் மட்டும் மீன்வளத்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2600 கோடி
முதலீடு செய்யப்பட்டு, அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. நாட்டில் 2014 ம் ஆண்டுக்குப் பிறகு மீன்வளத் துறையில் ரூ.38,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது

1950 முதல் 2014 வரை 55.79 லட்சம் கோடி டன் மீன்வள பொருட்கள் கையாளப்பட்டுள்ளன. 2014 க்கு பிறகு 162.48 லட்சம் கோடி டன் மீன்வள பொருட்கள் கையாளப்பட்டுள்ளன. 2025ம் ஆண்டுக்குள் 174 லட்சம் கோடி டன் மீன்வள பொருட்கள் கையாளப்பட இலக்கு மற்றும் 2025 க்குள் மீன் வள ஏற்றுமதியில் 1 லட்சம் கோடியை தொட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2014 க்கு பிறகு மீன் வளத்துறையில் 400 புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகி உள்ளன.
மீன்வளத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளையும் புதிய தொழில்களையும் இளைய
சமுதாயம் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மேடையில் பேசிய போது, வரும் கல்வி ஆண்டிலிருந்து டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில்
கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 10 பிரிவுகளின் கீழ் விருதுகள்
வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.