கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு மரணம் ஏற்படாது என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியா கொரோனா 2வது அலையால் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போதுவரை இந்தியாவில் 3 வகையான தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்ஷின் தடுப்பூசிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ஸ்புட்னிக் வி சில இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்படுவதாக கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் சார்பில் ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் 41 ஆண்கள் மற்றும் 22 பெண்கள் என மொத்தம் 63 பேர் பங்கேற்றனர். இவர்களில் 10 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசியும் 53 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தி கொண்டிருந்தனர். 36 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும், 27 பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய நிலையிலும், அதிக அளவில் காய்ச்சல் மற்றும் சோர்வு இருந்தது. அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகியிருந்தாலும் அவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலையும் ஏற்பட்டது. இருப்பினும் அவர்களில் ஒருவருக்கு கூட மரணம் ஏற்படவில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.







