வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதனைத்தொடந்ர்து ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் இடதுசாரி மாணவர்கள், கரப்பான் பூச்சி கட்சியினர், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டத்தை நடத்தினர்.
இதனிடையே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அதிகாரத்தைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதாகக் கூறி அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோடி ராகேஷ் குமார் சிங் என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த புகார் மீது தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் மூன்று உறுப்பினர்களின் ஒருமித்த ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரமான விவகாரங்களில் தேர்தல் ஆணையர்கள் மின்னணு முறையில் ஒப்புதல் அளிப்பதாகவும், பின்னர் அந்த ஒப்புதல் கோப்புகளில் பதிவு செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6-ல் எந்தத் திருத்தமும் செய்யவில்லை என்றும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காகப் பயன்படுத்தப்படும் கூடுதல் உறுதிமொழிப் படிவம் தனியான ஆவணம் என்றும், இணையதளத்தில் அது இடம்பெற்றுள்ள விதம் படிவத்தில் மாற்றம் செய்யப்பட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், 2025 ஜூன் 24, அக்டோபர் 27 மற்றும் 2026 மே 14 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான மூன்று உத்தரவுகளும் தேர்தல் ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளின் அடிப்படையிலேயே பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உள் ஆவணங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை என்றும், செய்தித்தாள் செய்தியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல என்றும் கூறியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் உரிய அதிகாரம் பெற்ற தேர்தல் பதிவு அதிகாரியின் உத்தரவே அவசியம் என்றும் விளக்கியுள்ளது. படிவம் 6 தொடர்பான இணையவழி விண்ணப்பத்தில், ஒரே ஓ.டி.பி மற்றும் மின்னணு கையொப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் கூடுதல் உறுதிமொழி இணைக்கப்பட்டதாகவும், 2026 அக்டோபர் 21 முதல் இணையவழி விண்ணப்பம் மற்றும் உறுதிமொழி ஆகியவை தனித்தனியாகப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.




