நடப்பு நிதியாண்டில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. நடப்பு நிதியாண்டில் 4-வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவிகிதமாக நீடிக்கிறது. பண்டிகை காலங்கள் தொடங்கி உள்ளதால் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 7.3 சதவிகிதமாக இருந்த மொத்த பணவீக்கம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.6 சதவிகிதமாக குறைந்துள்ளது. பணவீக்கத்தை 4 சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு, நடப்பு 2023-24 நிதியாண்டின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டின் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லாததால் வங்கிகள் வழங்கும் வீடும், வாகனம், தனிநபர் கடன்களில் மாற்றம் இருக்காது என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.







