வன உயிரின வார விழாவை முன்னிட்டு பழனியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நாடு முழுவதும் அக்டோபர் 2-ம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வன உயிரின வார விழாவாக கடைபிடிக்கப்படுகிறது. இதைனையடுத்து, பழனி வனச்சரகம் சார்பில் வன உயிரின வாரவிழா கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக, பழனியில் வன உயிரின பாதுகாப்பு உணர்வு பேரணி நடைபெற்றது.
பழனி வனச்சரகர் கோகுலக்கண்ணன் தலைமையில் பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கிய பேரணியை கோட்டாட்சியர் சரவணன் மற்றும் வட்டாட்சியர் பழனிச்சாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் வன உயிரினங்களின் முக்கியத்துவம் மற்றும் உயிரின பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கோஷம் எழுப்பியபடியே பேரணியாக சென்றனர். பழனி முக்கிய வீதிகளில் வழியாக சென்ற பேரணி, ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள், வனத்துறை ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சௌம்யா.மோ






