விடுமுறை அளித்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை கிடையாது

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக அரசு அறிவிப்பை மீறி விடுமுறை அளித்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாணவி உயிரிழந்த…

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக அரசு அறிவிப்பை மீறி விடுமுறை அளித்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வன்முறை வெடித்தது. அப்போது மாணவி படித்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டதோடு, பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் பள்ளியின் உள்ளே அத்துமீறி நுழைந்து, பொருட்களையும், மாணவர்களின் சான்றிதழ்களையும் தீயிட்டு எரித்தனர். இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி இந்த சம்பவத்திற்கு தனியார் பள்ளிகள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன.

 

மேலும், கடந்த 18-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் செயல்படாது என்றும் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என்றும், அவ்வாறு விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உடனே எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அரசின் எச்சரிக்கையை மீறி தமிழ்நாட்டில் 987 தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தது. பெற்றோர்களுக்கும், மாணவர்களின் மொபைல் எண்ணுக்கு இன்று (18-ம் தேதி) பள்ளிக்கு வரவேண்டாம் என காரணத்தை சொல்லாமல் குறுஞ்செய்தி மட்டும் அனுப்பியிருந்தது.

இதையடுத்து, விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, 18-ம் தேதி விடுமுறை அறிவித்ததற்கு பதில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாக கொண்டு பள்ளிகளை திறந்துவிடுவோம் என தனியார் பள்ளிகள் விளக்கம் அளித்தன. இந்த விளக்கத்தை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் ஏற்று கொண்டது.

 

பின்னர் கள்ளக்குறிச்சி சம்பவம் அரங்கேறிய மறுநாள் விடுமுறை விடப்பட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என தற்போது அறிவித்துள்ளது. அரசின் எச்சரிக்கையை மீறி விடுப்பு அறிவித்த 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.