அதிமுக தலைமை அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு அதன் சாவியை அலுவலகத்தின் மேலாளரிடம் அதிகாரிகள் இன்று ஒப்படைக்கின்றனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ம் தேதி நடைபெற்றபோது, கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். இதனால், அங்கு போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் யாரும் செல்ல கூடாது என வருவாய் துறை அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து சென்றனர். இதையடுத்து, அதிமுக அலுவலகத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிமுக-வின் அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று காலை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் அலுவலகத்தில் போடப்பட்டிருந்த சீலை அகற்றி, சாவியை அதிமுக தலைமை அலுவலகத்தின் மேலாளரிடம் ஒப்படைக்க உள்ளார்.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, 10 நாட்களாக பூட்டப்பட்டிருந்த கட்சி அலுவலகம் இன்று திறக்கப்பட உள்ளது. இதனால் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கும், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்