அதிமுகவில் ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என வெடித்த சர்ச்சையில் வெளிப்படையாக தெரிந்த முதல் பல பரிட்சைக்களம் ஜூன் 23ந்தேதி பொதுக்குழுதான். அதற்கு முன்புவரை கட்சியில் யாருக்க செல்வாக்கு என்பது ஊகங்கள் அடிப்படையிலான பேசுபொருளாகவே இருந்தது. ஜூன் 23ந்தேதி முதல்தான் இந்த விவகாரத்தை ஒரு முடிவை நோக்கி நகர்த்திய நிகழ்வுகள் ஒவ்வொன்றாக நிகழத் தொடங்கின. அந்த வகையில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளிடையே தனது பலத்தை நிரூபித்த தருணங்கள் மற்றும் அவருக்கு சாதமாக அமைந்த நிகழ்வுகள் என்னவென்று பார்ப்போம்.
1) ஜூன் 23ந்தேதி பொதுக்குழுவை முதலில் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரும் இணைந்தே முடிவு செய்திருந்தனர். பொதுக்குழுவின் வரைவு தீர்மானங்களை தயாரித்த தீர்மானக் குழு கூட்டத்தில்கூட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார். இந்நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும், ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற கூடாது என வாதிட்டதும், பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களும், மாவட்டச் செயலாளர்களும் யார் பின்னால் இருக்கிறார்கள் என்பதை யூகிக்க வைத்தது. இந்த வழக்கில் பொதுக்குழுவுக்கு தடைவிதிப்பது தொடர்பாகவோ, தீர்மானங்கள் தொடர்பாகவோ இடைக்கால உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக, ஓபிஎஸ் தரப்பினர் உயர்நீதிமன்ற இரு நீதிபகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் நள்ளிரவில் தொடங்கிய இந்த விசாரணை அதிகாலை வரை நீடித்தது. பொதுக்குழுவை கூட்ட அனுமதி அளித்த நீதிபதிகள், ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர புதிதாக தீர்மானங்கள் எதையும் நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டனர். ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஆக்க காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் இந்த உத்தரவால் ஏமாற்றம் அடைந்தனர். இனி பொதுக்குழுவில் இபிஎஸ் ஆதரவாளர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என நினைத்தபோது, அவர்களது வியூகம் வேறுவிதமாக இருந்தது. நிறைவேற்றுவதன் மூலம் ஏற்படவிருந்த ஒற்றை தலைமைக்கு நிராகரிப்பதன் மூலம் அடித்தளம் போட்டனர்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்குரியவர்கள் அடைப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று செயற்குழுவில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு பொதுக்குழுவின் அங்கீகாரம் பெறும் தீர்மானம் உள்பட ஓ.பன்னீர்செல்வத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட 23 தீர்மானங்களையும் நிராகரித்தனர். பெரும்பாலான பொதுக் குழு ஆதரவாளர்கள் தனது பக்கம் இருப்பதை அந்த கூட்டத்தில் நிரூபித்தார் எடப்பாடி பழனிசாமி. ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்து ஓபிஎஸ் பாதியிலேயே பொதுக்குழுவைவிட்டு வெளியேறும் அளவிற்கு இபிஎஸ்க்கு ஆதரவாகவும், ஓபிஎஸ்க்கு எதிராகவும் முழக்கங்கள் எழும்பின. மேலும் அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராக இருந்த தமிழ்மகன் உசேன் கட்சியின் நிரந்தர அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த பொதுக்குழுவிற்கான அறிவிப்பு அவர் மூலம் வெளியிடப்பட்டது. ஜூலை 11ந்தேதி அடுத்த பொதுக்குழு நடத்தப்படும் என 2,100க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் தேதி குறிக்கப்பட்டது. இப்படி ஜூன் 23ந்தேதி இபிஎஸ் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

2) ஜூலை 6ந்தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் இபிஎஸ் மேற்கொண்ட சட்டப்போராட்டங்களுக்கு கைகொடுத்தது. சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் அணி தரப்பில் தொரப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அறிவிக்கப்படாத தீர்மானங்கள் நிறைவேற்றபடக்கூடாது என்கிற உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும் ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவை சட்டப்படி நடத்தலாம் என்றும் அனுமதி அளித்தது.
3) ஜூலை 11ந்தேதி காலை பொழுதை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருதரப்பிலும் அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. அந்த பொழுது அதிமுக அரசியல் பயணத்தில் திக் திக் நிமிடங்களாக கடந்தது. காலை 9.15 மணிக்கு சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுக்குழு கூட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் இபிஎஸ் தரப்பினர் செய்து வைத்திருந்தனர். ஆனால் பொதுக்குழு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒபிஎஸ் மற்றும் அம்மன் வைரமுத்து தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் காலை 9 மணிக்கு தீர்ப்பளித்தது. அதுவரை பொதுக்குழு நடைபெறுமா, நடைபெறாதா என்கிற பரபரப்பும் பதற்றமும் நிலவிக்கொண்டேயிருந்தது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்ததும் உற்சாகமாக செயற்குழு, பொதுக் குழு நிகழ்ச்சிகளை இபிஎஸ் அணியினர் தொடங்கினர்.
4) ஜூலை 11ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் சட்டவிதி மீண்டும் திருத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற இரட்டை தலைமை நீக்கப்பட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வகித்த பொதுச் செயலாளர் என்கிற பதவி மீண்டும் உருவாக்கப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த சில நிமிடங்களில் பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அந்த பதவியில் நியமித்தார் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டுக்கொண்டிருக்க அதையும் நிகழ்த்திக்காட்டினார் எடப்பாடி பழனிசாமி. கூடவே ஓபிஎஸ்க்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் வைத்திலிங்கமும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பொதுக்குழு முற்றிலும் தனது ஆதரவாளர்களால் நிரம்பியிருந்த நிலையில் இத்தனை அதிரடிகளை ஜூலை 11ந்தேதி அடுத்தடுத்து எந்த சலசலப்பும் இன்றி நிகழ்த்தி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.
5) குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட திரௌபதி முர்மு தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஜூலை 2ந்தேதி சென்னை வந்தார். திரௌபதி முர்வு பாஜக கூட்டணி கட்சியினரிடையே ஆதரவு கோருவதற்காக நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 62 அதிமுக எம்.எல்.ஏக்களை தன்னுடன் அழைத்துவந்து பலத்தை நிரூபித்தார் எடப்பாடி பழனிசாமி. அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்ற பிறகுதான் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மேடையேறினார். அவருடன் இரண்டு அதிமுக எம்.எல்.ஏக்களே உடன் வந்தனர்.
6) அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் மீண்டும் ஒரு முறை தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டது. அதுதான் ஜூலை 17ந்தேதி நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம். கட்சியின் அதிகார மையமாக ஆன பிறகு அவர் கூட்டிய முதல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் அது. குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக விளக்குவதற்காக கூட்டப்பட்ட அந்தக் கூட்டத்தில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துவரும் 62 எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர். சில எம்.எல்.ஏக்கள் அன்று கூட்டத்திற்கு வராமலிருந்தால்கூட இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது அவரது அணிக்குள்ளேயே விவாதப் பொருளாகியிருக்கும். ஆனால் அது போன்ற சூழல் ஏற்படாமல் 62 எம்.எல்.ஏக்களையும் கூட்டத்தில் பங்கேற்கச் செய்து தனது பலத்தை நிரூபித்தார் இபிஎஸ்.
7) அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தம்மை கட்சியை தாண்டி பிற இடங்களிலும் நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் இபிஎஸ்க்கு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக சார்பில் வங்கி பரிவர்த்தனை செய்வதை அக்கட்சியின் வைப்புத்தொகைகள் அதிக அளவு உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏற்றது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
8) முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு அதிமுகவில் பலர் போட்டிபோடுவதால் இது எடப்பாடி பழனிசாமிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டன. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை அதிமுக சட்டமன்ற கட்சித் துணைத்தலைவராக நியமித்தார் இபிஎஸ். சலசலப்புகள் இன்றி இந்த தேர்வை முடித்து தனது சாமர்த்தியத்தை காட்டினார் எடப்பாடி பழனிசாமி.
9) ஜூன் 23ந்தேதி பொதுக் குழுவில் பெரும் களேபரங்கள் அரங்கேறின. எனினும் அன்றிலிருந்து ஜூலை 11ந்தேதி காலையில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு முன்புவரை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகை அமைதியாகவே இருந்தது. கட்சி அலுவலகம் தங்கள் கையைவிட்டு ஓபிஎஸ் தரப்பு வசம் செல்லாமல் இந்த நேரத்தில் கவனமாக பார்த்துக்கொண்டு வந்தார் இபிஎஸ். கட்சி அலுவலகம் யாருடையது என்கிற வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் ஜூலை 11ந்தேதி காலை தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த பிறகே வன்முறை வெடித்தது என இபிஎஸ் தரப்பில் இதை வைத்து நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.
10) அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கட்சி எடப்பாடி பழனிசாமி கைக்குள் வந்துவிட்டதை ஒவ்வொரு சம்பவமாக உணர்த்தி வந்தன. இந்நிலையில் கட்சி தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்க சென்னை உயர்நீதிமன்நம் அளித்த உத்தரவு அவருக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. ஜூலை 11ந்தேதி காலை ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் மாளிகையை கைப்பற்றிய பின்னர் அக்கட்சி வளாகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் கலவரம் மூண்டது. சுமார் 40க்கும் மேற்பட்டோர் இதில் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார். கட்சி அலுவலகம் தங்களுக்குதான் சொந்தம் என உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் தரப்பிலும் இபிஎஸ் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் எம்.ஜி.ஆர் மாளிகையின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 20ந்தேதி உத்தரவிட்டது.
அதிமுவில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இப்படி பல்வேறு அம்சங்கள் சாதகமாக அமைந்தாலும், தேர்தல் ஆணைய சட்டப்படி தாமே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறார். எடப்பாடி பழனிசாமியையே அதிமுகவைவிட்டு நீக்கிவிட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவது, கட்சி விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரால் தொடரப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை எதிர்கொள்வது, அடுத்து 4 மாதத்திற்குள் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி கட்சியின் அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளராக மாறுவது போன்றவை எடப்பாடி பழனிசாமி முன்பு அடுத்தடுத்து உள்ள சவால்களாக பார்க்கப்படுகின்றன.
-எஸ்.இலட்சுமணன்







