2023-24ம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 5.9 சதவீதமாக இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது கடைசி முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், வலுவான பொது நிதியையும் நிதித்துறையும் உருவாக்க இந்த அரசு இலக்காக கொண்டிருக்கிறது. இந்த நிதி சமூகத்தில் அனைத்து மக்களுக்கும் பயன்பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரும் 2023-24ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 5.9 சதவீதமாக இருக்கும். நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 6.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. . 2025-26ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அடுத்த நிதியாண்டில் வரி வருவாய் 23.3 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனவும் மாநிலங்கள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் வரை நிதி பற்றாக்குறையை வைத்துக் கொள்ளலாம் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2022-23ம் நிதியண்டில் வருவாய்க்கும் செலவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 16,61,196 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். 2021-22ம் நிதியாண்டில் இந்த வித்தியாசம் 15,91,089 கோடியாக இருந்துள்ளது.







