ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம்: அதிமுக இன்பதுரை கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

2016-ஆண்டு நடந்த ராதாபுரம் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவு தொடர்பான வழக்கை விரைந்து முடித்துவைக்க வேண்டும் என்ற அதிமுக சேர்ந்த இன்பதுரை கோரிக்கையை நிராகரித்ததோடு, வழக்கு தொடர்ந்து விசாரிக்கபப்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

2016-ஆண்டு நடந்த ராதாபுரம் தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை முடிவு தொடர்பான வழக்கை விரைந்து முடித்துவைக்க வேண்டும் என்ற அதிமுக சேர்ந்த இன்பதுரை கோரிக்கையை நிராகரித்ததோடு, வழக்கு தொடர்ந்து விசாரிக்கபப்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் சார்பில் ஐ.எஸ்.இன்பதுரையை எதிர்த்து , திமுக வேட்பாளர் அப்பாவு போட்டியிட்டார். இதில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,596 ஓட்டுகளும், அப்பாவு 69,541 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இந்த நிலையில் திமுக வேட்பாளர் அப்பாவு, இன்பதுரையை விட 49 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதனையடுத்து தனக்கு விழுந்த தபால் வாக்குகளை நிராகரித்து, தன்னை தோல்வியடையச் செய்ததாக திமுக வேட்பாளரான அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . அதனால் கடைசி சில சுற்று வாக்குகளை மறுபடியும் எண்ணுவதுடன், தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ணுவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அதிமுக-வின் இன்பதுரை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதித்தது. இதனால் ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்பதுரை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ,இந்த விவகாரம் முடிந்துபோன விசயம். மேலும், 2021-ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அந்த தொகுதியில் மீண்டும் அப்பாவு வெற்றியும் பெற்று சபாநாயகர் ஆகிவிட்டார். எனவே இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க வேண்டியதில்லை என்பதால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பாவு தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், 2016-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட வேட்பாளரின் வெற்றி, உண்மையிலேயே யாருக்கு என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் முடிவு தெரியாததால் தான் இன்பதுரை தற்போது வரை சட்டமன்ற உறுப்பினருக்கான பென்ஷனை வாங்கி வருகிறார். எனவே வழக்கை முடித்து வைக்கக்கூடாது. மாறாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்ற இன்பதுரையின் கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்ததோடு , வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் எனவும் கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.