நிஃபா வைரஸ் எதிரொலியாக பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் மர்ம காய்ச்சலில் 2 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் தொடர்பில் இருந்த மேலும் நான்கு பேருக்கு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்மாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியதையடுத்து கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சலுக்காக 75 படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 6 ஐசியூ வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த இருவரின் தொடர்பில் இருந்த 75 பேரையும் தனிமைப்படுத்தி தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் வீடு அமைந்துள்ள வார்டு பகுதிகள் சீல் வைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள நான்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் கேரளத்தில் 2 பேர் நிஃபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்ததாக அறிவித்துள்ளார். மேலும், மாநில அரசுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதற்காக மத்திய சுகாதாரத் துறை உதவும் எனவும் குறிப்பிட்டார். நிபா காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய குழு விரைவில் கேரளா வர உள்ளது.
இந்த நிலையில் நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரளத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் மருத்துவமனை பணியாளர்கள் பிபிஇ கிட் அணிந்து பணிபுரியவும் கேரள சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இதேபோல நிஃபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 16 குழுக்களை அமைத்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.







