திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட என்ஐஏ சோதனை நிறைவு..!

தஞ்சை மாவட்டம் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை முதல் தஞ்சை மாவட்டம், திருபுவனம், திருமங்கலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையானது தற்போது முடிவடைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர்…

தஞ்சை மாவட்டம் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை முதல் தஞ்சை மாவட்டம், திருபுவனம், திருமங்கலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையானது தற்போது முடிவடைந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். குறிப்பாக மதமாற்றத்தை தட்டிக்கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. கொலை வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டு விட்டனர். தலைமறைவாக உள்ள 5 பேரை என்ஐஏ தேடி வருகிறது. மொத்தம் 18 பேர் மீது என்ஐஏ 5000 பக்க முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை முதல் தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், திருபுவனம், திருமங்கலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருபுவனம், ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளாக தேடப்பட்டு வரும் திருபுவனம் ஜின்னா, அவரது தந்தை ஹாஜி முகம்மது, திருமங்கலக்குடி சாகுல் ஹமீது வீடுகளிலும் திருமங்கலக்குடி முகமது நபீல் , பாப்புளர் பிரண்ட் ஆப் இந்தியா முன்னாள் மாவட்ட தலைவர் குலாம் உசேன், உள்ளிட்டார் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனை முடிவில் இவ்வழக்கில் தொடர்புடைய தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருபுவனம் முகமது அலி ஜின்னா வீட்டிலிருந்த டைரிகள் மற்றும் செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதே பகுதியில் உள்ள அவரது தந்தை ஹாஜி முகம்மது வீட்டிலிருந்து செல்போன், ஆடு வெட்டும் கத்தி உள்ளிட்ட பொருட்களையும், திருமங்கலக்குடி பகுதியில் பாப்புளர் பிரண்ட் ஆப் இந்தியா முன்னாள் மாவட்ட தலைவர் குலாம் உசேன் வீட்டிலிருந்து லேப்டாப், ஹார்டிஸ்க்,மொபைல் உள்ளிட்ட பொருட்களையும், அதே பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது, முகமது நபீல் உள்ளிட்டோர் வீட்டிலிருந்து செல்போன், லேப்டாப் டைரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒரே நேரத்தில் திருவிடைமருதூர் சுற்றுவட்டாரத்தில் திருபுவனம், திருமங்கலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 5 இடங்களிலும், தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், பாபநாசம் ராஜகிரி, கும்பகோணம், திருபுவனம், திருமங்கலக்குடி என 7க்கும் மேற்பட்ட இடங்களிலும் அதிகாலை முதல் நடந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையானது தற்போது நிறைவடைந்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.