சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அதன்படி, சென்னையில் கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்கவும்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!
இதேபோல் திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலியில் டவுன் காரிக்கான்தோப்பு பகுதியில் உள்ள மன்சூர் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியிலும், தென்காசியின் அச்சன்புதூரிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நிறைவு பெற்றது. எண்ணெய் வியாபாரி கமாலுதீன் என்பவரின் வீட்டில் நடைபெற்ற சோதனைக்குப் பின் அவரது செல்போன், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவற்றை கைப்பற்றி கொண்டு சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் வடகரை என்ற இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காலையிலிருந்து திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உக்கடம், குனியமுத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக 7 பேரை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவர்கள் அளித்த தகவலின்பேரில் தற்போது சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா என மொத்தம் 3 மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.








