மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க இன்று கடைசி நாள் ஆகும். தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர 22 லட்சம்…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க இன்று கடைசி நாள் ஆகும்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

மின் நுகர்வோர்கள் குறித்த முறையான தகவல்களை பெறும் நோக்கில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 15ம் தேதி முதல் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்கவும்: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டது. டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனினும் இந்த காலக்கெடுவிற்கும் ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

சுமார் 2 லட்சம் பேர் இன்னும் இணைக்காத நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்க்க அரசு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. ஏற்கனவே, 3 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டதால், மேற்கொண்டு வழங்கப்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இன்றைக்குள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் இணைப்பு துண்டிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் வழியாக ஆதார் எண்ணை இணைத்தவர்கள் சிலருக்கு, ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்று குறுந்தகவல் சென்றுள்ளது.

எனவே, உடனடியாக அவர்கள் மீண்டும் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும். இதேபோல், வீட்டு உரிமையாளர் அனுமதியின்றி வேறு ஒருவரின் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததால், அதையும் சரி செய்யும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.