ஞானேஷ் குமாருக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் – INDIA கூட்டணி இன்று ஆலோசனை!

ஞானேஷ் குமாருக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து INDIA கூட்டணி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வியூகம் வகுக்க எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது. அதன்படி இன்று மாலை காணொளி வாயிலாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.இந்த கூட்டத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள INDIA கூட்டணியின் மாபெரும் பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

முன்னதாக அக்டோபர் 12-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து “ஜனநாயகத்திற்கான பேரணி” நடத்தினர். தேர்தல் முறைகேடு மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கூட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதே நாளில் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மாபெரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து 13-ம் தேதி ராகுல் காந்தி தனது இல்லத்தில் INDIA கூட்டணி தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்து அடுத்தகட்ட திட்டம் குறித்து ஆலோசித்தார்.

எதிர்க்கட்சிகளுடன் CJP அமைப்பும் தொடர்ந்து ஞானேஷ் குமார் ராஜினாமாவை வலியுறுத்தி வருகிறது. ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் CJP போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.