தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜராஜ சோழன் சதய விழாவான இன்று, அது குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை, படைவலிமை, போர்த்திறன் எனப் பலவற்றிலும் மாபெரும் உயரங்களை எய்தி, தமிழர் பெருமையை உலகறியச் செய்தவர் மாமன்னர் இராசராசச் சோழன்! அவரது பிறந்தநாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடிட, 2022-ஆம் ஆண்டு திமுக அரசில் வெளியிட்ட அறிவிப்பிற்கிணங்க, 1041-ஆவது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.
மேலும், துறைவாரியாகச் சோழர் காலச் சிறப்புகளை இக்காலத் தலைமுறையினரின் கண்முன் கொண்டு வரவேண்டும் என்ற பேரார்வத்துடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 56 கோடி ரூபாய் செலவில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க திமுக ஆட்சியில் விதையை ஊன்றியிருக்கிறோம். அந்த விதை மரமாகிட வேண்டும்! பழக்க தோஷத்தில் அந்தத் திட்டத்தையும் தவெக அரசு குறுகிய பார்வையுடன் இரத்து செய்து, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்திட மாட்டார்கள் என நம்புவோம். இராசராசச் சோழனின் சதய விழா தஞ்சையில் சிறப்புற நடந்தேறுக! அரசர்க்கரசரின் புகழ் வாழ்க!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




