ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு: அதிமுக அவைத் தலைவர்

அதிமுகவின் அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11ம் தேதி  நடைபெறும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார்.  அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமன…

அதிமுகவின் அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11ம் தேதி  நடைபெறும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார். 

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமன மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நிரந்தர அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தார். தமிழ் மகன் உசேனின் நியமனத்துக்கு செயற்குழு – பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.

தொடர்ந்து மேடையில் பேசிய தமிழ் மகன் உசேன், எம்.ஜி.ஆரை திமுகவில் இருந்து நீக்கியதைக் கண்டித்து அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தில் இணைந்தேன். எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று நான் அழைத்தேன். அவர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று ரத்தக் கையெழுத்து போட்டவன் நான். அனைவரும் என் சகோதரர்கள், அனைவரும் என் தொண்டர்கள்.

ஏழைத்தொண்டனும் அவைத்தலைவராக வரலாம் என்ற வரலாற்றை உருவாக்கிய ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும், தொண்டர்களின் தளபதி எடப்பாடி பழனிசாமிக்கும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பாதம் தொட்டு வணங்கி நன்றியை காணிக்கையாக்குகிறேன். அவைத்தலைவராக என்னை நியமனம் செய்தமைக்கு நன்றி என தெரிவித்தார்.

தொடர்ந்து அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11ம் தேதி  நடைபெறும் என்று அவைத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.