அதிமுக பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இரட்டைத் தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு என குற்றம்சாட்டினார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால், வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து, வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூடியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், முதலில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின், தற்காலிக அவைத்தலைவராக இருக்கும் தமிழ் மகன் உசேன் கட்சியின் நிரந்தர அவைத்தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தீர்மானத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.
அதேநேரத்தில், ஒற்றை தலைமை வேண்டும் என்ற முழக்கம் அரங்கம் முழுவதும் எதிரொலித்தது. அதிமுக சார்பில் இன்றை கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார். மேலும் சி.வி.சண்முகம் மேடையில் பேசியபோது, அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை என்ற தீர்மானத்துடன் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என ஆவேசமாக கூறினார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அவைத்தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தை வாசிக்கிறேன் என தொடங்கிய சி.வி.சண்முகம், இரட்டைத்தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு என குற்றம்சாட்டினார். இரட்டை தலைமையால் சங்கடம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இரட்டைத்தலைமையால் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆவேசப்பட்டார்.
இது கட்சித்தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் தொண்டர்களுக்கு இதனால் சோர்வு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று வலிமையான, தெளிவான ஒற்றைத்தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற அவர் பொதுக்குழுவில் இரட்டைத்தலைமையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். ஒற்றைத்தலைமையின் கீழ் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் கேட்டுக்கொண்டார்.
– இரா.நம்பிராஜன்