நியூஸ்7 தமிழின் ஊரும் உணவும் திருவிழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மிகப்பெரிய வெற்றியை அளித்தனர்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற உணவுப் பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், ஊரும் உணவும் திருவிழாவை நியூஸ்7 தமிழ், பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு மதுரையிலும், அதனைத் தொடர்ந்து ஓசூரிலும் நடைபெற்ற இந்த ஊரும் உணவும் திருவிழா, மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக காரைக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக நியூஸ்7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வித்தியாசமான உணவுப்பொருட்களைக் கொண்ட 30-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த உணவுத் திருவிழாவில் குல்கந்த் அல்வா, இளநீர் அல்வா, கவுனி அல்வா, மஸ்கோத் அல்வா, அசோ அல்வா, கோதுமை அல்வா என அல்வா வகைகளும், அந்த அல்வாவை எடுத்து சென்று அழகாக உபசரிக்கும் ரோபோவும் இடம் பெற்றிருந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையும் படியுங்கள் : மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் – சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வர அரசு திட்டம்
பெங்களுரா, இமாம், பசந்த், நடுசாலை, மல்கோவா, செந்தூரம், அல்போன்சா, குதாத்தத், பங்கனப்பள்ளி உள்ளிட்ட மாம்பல வகைகள் நேரடியாக சேலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், தூத்துக்குடி மக்ரூன், முந்திரி நெய் மிட்டாய், உடன்குடி பனங்கற்கண்டு, தாமிரபரணி தண்ணீரில் இருந்து தயாரிக்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி அரிசி அப்பளம், கிழங்கு அப்பளம், உளுந்து அப்பளம் போன்றவற்றை காரைக்குடி மக்கள் விரும்பி அதிகளவில் வாங்கிச் சென்றனர்.
செட்டிநாட்டு பதார்த்தங்களான தேன்குழல், அதிரசம், சீப்புசீடை, சின்ன சீடை, மனகோலம், பாசிபருப்பு மாவு உருண்டை, தேங்காய்பால் தட்டை, தேங்காய்பால் ரிப்பன் பக்கோடா, வெள்ளை பணியாரம், கந்தரப்பம் போன்றவற்றின் விற்பனை, அதன் சொந்த மண்ணான காரைக்குடியில் விண்ணை தொட்டது. செய்யாறு பருத்திப்பால், நாட்டுச்சர்க்கரை பானகம் என 18 வகை மூலிகை தேநீர் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. மத்தி, முரல், சங்கரா, பரோட்டா, சிக்கன் சுக்கா போன்ற உணவுகள் அசைவ பிரியர்களை திருப்திப்படுத்தின.
நியூஸ்7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா, வெறும் உணவுகளை வைத்திருக்கும் உணவு திருவிழாவாக மட்டுமல்லாமல், மல்லர் கம்பம், சிலம்பம், பரதநாட்டியம், தீ விளையாட்டு, வாள் சுற்றுதல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளின் மூலம் சிறுவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதத்திலும் அமைந்திருந்தது.
இளவட்டக்கல், உரி அடிக்கும் நிகழ்ச்சிகளோடு உணவு பொருட்களை சுவைப்பது என்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்று பொதுமக்கள் மகிழ்ச்சியும், திருப்தியும் தெரிவித்தனர். இவ்வாறு காரைக்குடியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஊரும் உணவும் திருவிழா, அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இரண்டு நாட்கள் நடைப்பெற்ற உணவு திருவிழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்ற உணவு திருவிழாவை நடத்த வேண்டும் என்றும் காரைக்குடி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். மக்களின் பேராதரவுடன் காரைக்குடியில் நியூஸ்7 தமிழ் நடத்திய ஊரும் உணவும் திருவிழா மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.









