நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி மதுரையில் நடத்திய பிரமாண்டமான உணவு திருவிழா இன்று இரவு 10 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த உணவு திருவிழாவில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை ஒரே இடத்தில் சங்கமிக்க வைக்கும் வகையில் ஊரும் உணவும் திருவிழாவை நியூஸ் 7 தமிழ் நடத்தியது. மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழா, பாரம்பரிய பறை இசையுடன் தொடங்கியது. இந்த உணவுத் திருவிழாவை, பார்வையாளராக வந்த சிறுவன் ஒருவன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்த திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ணகிரி நைஸ் பால்கோவா, கீழக்கரை துதல், மார்த்தாண்டம் தேன், நாகை பனங்கிழங்கு கேக், சேலம் ஜவ்வரிசி, இனிப்பு மற்றும் கார வகைகள் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்தது.
காரைக்கால் அல்வா மற்றும் ஜாமூன், பள்ளிப்பாளையம் சிக்கன், திண்டுக்கல் பிரியாணி, 25 வகையான சர்பத், நெல்லை மாப்பிள்ளை ஜூஸ் உள்ளிட்டவற்றை வாங்கி பொதுமக்கள் விரும்பி உண்டனர். கருப்பு கவுணி அரிசி கொண்டு பாரம்பரிய முறைபடி செய்யப்பட்ட ஐஸ்கிரீம் குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது.
மேலும் உணவுத் திருவிழாவுக்கு வரும் வாடிக்கையாளர்களில் மணிக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிரைண்டர் பரிசாக வழங்கப்பட்டது.
உணவுத் திருவிழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக இளவட்டக்கல் தூக்குதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதேபோல் பல பராம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டிகளில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பரிசுகளை தட்டி சென்றனர்.
இந்த உணவு திருவிழாவில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கடந்த 2 நாட்களாக மிக பிரமாண்டமான முறையில் நடந்த உணவு திருவிழா இன்றுடன் நிறைவடைந்தது. மதுரையின் மக்களின் அமோக ஆதரவில் உணவு திருவிழா இனிதே நிறைவு பெற்றது.








