முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவிற்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர் என அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு சென்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அக்கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேருந்து நிலையம் முன்பு ஏராளமான அளவில் திரண்டிருந்த தொண்டர்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை பிளவுபடுத்தி வீழ்த்தி விடலாம் என கனவு காண்பதாக விமர்சித்தார். அதிமுகவை வீழ்த்த மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும்
அத்தனையுயையும் மக்கள் துணைகொண்டு வீழ்த்துவோம் எனவும் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்தார்.
திமுகவுடன் இணைந்து அதிமுகவின் இருபெரும் தலைவர்களுக்கும், அதிமுகவிற்கும், அதிமுக தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் என்று சாடிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவினர் கோவிலாக எண்ணும் அதிமுக தலைமை அலுவலகத்தையும், ஜெயலலிதா இருந்த அறையையும் காலால் உதைத்து ஈவு இரக்கமின்றி அங்குள்ள பொருட்களை ஓபிஎஸ் தரப்பினர் சேதப்படுத்தியதாகக் கண்டனம் தெரிவித்தார். அதிமுக அலுவலகத்தை உதைத்தது ஒன்றரைக்கோடி அதிமுக தொண்டர்களின் நெஞ்சில் உதைப்பதற்கு சமம் என்றும் எடப்பாடி பழனிசாமி ஆவேசத்துடன் கூறினார். ஓபிஎஸ் தரப்பினரால் அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்களையும், பொருட்களையும் மீட்டுத்தரமுடியாத அரசு திமுக அரசு என்று குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, பலம் பொருந்திய அதிமுகவிற்கே இந்நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார். திமுக அரசு எப்போது போகும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, 60அமாவாசைகளில் 14அமாவாசைகள் சென்றுவிட்டன மீதமுள்ள 46அமாவாசைகள் முடியும் முன்பே வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் எனக் கூறினார்.
மக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் வீட்டு வரி, மின்சார வரி, பால்விலை என அனைத்தையும் ஏற்றி வாக்களித்த மக்களுக்கு அருமையான அற்புதமான பரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக துணைப்பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உட்பட ஏராளமான அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.







