நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” பாலின சமத்துவ முன்னெடுப்பு நிகழ்ச்சியில் மதுரை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மற்றும் எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான கீதா இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் முன்னிலையில் நியூஸ் 7 தமிழ் ஊழியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.
வெள்ளைமலைப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி
இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் “நிகரென கொள்” உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வலியுறுத்தி முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்திலும் கையொப்பமிட்டனர்.
நாட்டார்மங்கலம் ராஜிவ்காந்தி தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நாட்டார்மங்கலம் ராஜிவ்
காந்தி தேசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாலின சமத்துவத்திற்கான
நிகரென கொள் உறுதிமொழி மற்றும் மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலின சமத்துவ உறுதி மொழி ஏற்றனர். அதனைத்தொடர்ந்து மாதவிடாய் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது அதில் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், உதவி ஆசியர்கள் மாணவர்கள்
கலந்து கொண்டு ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.









