நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு காட்சிகள் மறுப்பதற்கு இல்லை – திருப்பூர் மேயர் பேட்டி

நியூஸ் 7 தமிழில் காட்டப்பட்ட காட்சிகள் அனைத்தும் உண்மை மறுப்பதற்கு இல்லை என்றும் கூடிய விரைவில் திக்கு முக்காடும் திருப்பூர் திறன்மிகு திருப்பூர் ஆக மாற்றப்படும் என்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். திருப்பூர்…

நியூஸ் 7 தமிழில் காட்டப்பட்ட காட்சிகள் அனைத்தும் உண்மை மறுப்பதற்கு இல்லை என்றும் கூடிய விரைவில் திக்கு முக்காடும் திருப்பூர் திறன்மிகு திருப்பூர் ஆக மாற்றப்படும் என்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சியின் அடிப்படை கட்டமைப்பு போதுமானதாக இல்லை என நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி இன்று காலை முதல் திக்கு முக்காடும் திருப்பூர் என்ற தலைப்பில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நான்கு மண்டலங்களிலும் செய்தியாளர்களைக் கொண்டு அந்தந்த பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும், பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டுத் தொடர் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் மழை நீர் வடிகால், பாதாளச் சாக்கடை மற்றும் நான்காம் குடிநீர் திட்டத்திற்கான குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடல் இல்லாததின் காரணமாக மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலுமே பொதுமக்கள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருவது கள ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

நான்கு மண்டலங்களிலிருந்தும் செய்தியாளர்கள் காலை முதல் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில் இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டுள்ளார். பின்னர் நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், காலை முதல் திக்கு முக்காடும் திருப்பூர் என்ற தலைப்பில் நியூஸ்7 தமிழில் காட்டப்பட்ட காட்சிகள் அனைத்தும் உண்மைதான் மறுப்பதற்கு ஏதும் இல்லை என்றார்.

கடந்த ஏழு ஆண்டுக் காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாதது மற்றும் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அதிகாரிகள் மற்றும் அரசு பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடல் இல்லாததின் காரணமாக பணிகள் முழுமை அடையாமல் உள்ளது. ஆனால் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் முயற்சி மேற்கொண்டு வரப்படுகிறது.

மேலும் முதல் முறையாக ஒப்பந்ததாரர்களை மாநகராட்சி கூட்டத்திற்கு வரவழைத்து மாமன்ற உறுப்பினர்களே விவரங்களை அவர்களிடம் நேரடியாகக் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கவும், நான்காம் குடிநீர் திட்டப் பணியை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மாநகராட்சி நிர்வாகத்திடம் நேரடியாகத் தெரிவிப்பதற்காக ஒரு குரல் புரட்சி சொல்லுங்கள் செய்யப்படும் என்ற திட்டத்தைத் தொடங்கி அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்கும் வகையில் மக்களுடன் மேயர் என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருவதாகவும், திக்கு முக்காடும் திருப்பூர் என்ற தலைப்பை திறன்மிகு திருப்பூர் என்ற மாற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.