நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி – மதுரையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தொடக்கம்

மதுரையில் மழைநீர் வடிகால்கள் குறித்து நியூஸ் 7 தமிழ் நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.   மதுரையில் கடந்த 3-ம் தேதி நியூஸ் 7 தமிழ்…

மதுரையில் மழைநீர் வடிகால்கள் குறித்து நியூஸ் 7 தமிழ் நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

 

மதுரையில் கடந்த 3-ம் தேதி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் களஆய்வு நடைபெற்றது. ‘மாமதுரை அவலங்கள், பிரச்னை என்ன? தீர்வு என்ன?’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த கள ஆய்வில், கழிவுநீர் ஓடைகளாகும் மழைநீர் வடிகால்கள், குடிநீரில் துர்நாற்றம், குண்டும் குழியுமான சாலைகள் இதனை பற்றியும் இதற்கு மதுரை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் நாள் முழுவதும் நேரலை செய்யப்பட்டது.

 

அப்போது, பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் பற்றியும், பெரும்பாலான இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் ஏற்படும் சிரமங்கள் பற்றியும் நியூஸ் 7 தமிழ் வாயிலாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதன் எதிரொலியாக மதுரையில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.


100 வார்டுகளில் உள்ள மழை நீர் வடிகால்கள் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு தூர் வாரப்பட்டு வருகின்றன. மழை நீர் வடிகாலில் மழை நீர் செல்ல முடியாமல் டன் கணக்கில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. வட கிழக்கு பருவ மழைக்கு முன்னர் மழை நீர் வடிகாலை தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.