அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து கொள்வதால் சென்னை, காமராஜபுரம் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் மழை நின்ற பின்னரும் கூட வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.இந்நிலையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழில் இன்று தொடர் நேரலையை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்கிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை, காமராஜபுரம் மக்கள் நியூஸ் 7-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : அம்பத்தூர் ஏரியிலுருந்து வரும் மழை நீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்துகொள்கிறது. மழை காலத்தில் இடுப்பளவிற்கு நீரில்தான் நடந்து செல்ல வேண்டும். வாஞ்சி நகரில் கழுத்தளவிற்கு தண்ணீர் வந்துவிடும். இதனால் உறவினர்களில் வீடுகளுக்கு சென்று தங்கிவிடுவோம். மின்சார வசதி துண்டிக்கப்படும். சுமார் 40 ஆண்டுகளாக இந்த சிக்கலை சந்தித்து வருகிறோம். ஏரிகளுக்கு செல்லக்கூடிய கால்வாய்களை அகலப்படுத்த வேண்டும். அம்பத்தூர் நகராட்சியாக இருந்தபோது, அமைக்கப்பட்ட மழை நீர் கால்வாய்கள்தான் இன்னும் இருக்கிறது. இந்த கால்வாய்கள் அமைக்கப்பட்டு 30 வருடங்கள் ஆகிவிட்டபோதும், இது அகலப்படுத்தப்படவில்லை. இப்பகுதியில் சுமார் 25 ஆண்டு காலம் பாதாள சாக்கடை திட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. இன்னும் முடிவில்லை. சாக்கடைத் தண்ணீர் பாதாளச்சாக்கடை இணைப்பில் செல்லாமல், மழை நீர் வடிகால்களில் செல்கிறது. பாதாளச் சாக்கடை இணைப்பில் மழைநீர் செல்கிறது. இது முறையாக சீரமைத்தால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும்” என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.








