சென்னை ஐஐடியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள்

சென்னை ஐஐடியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியின் 58வது பட்டமளிப்பு விழா நேற்று (நவ.21) நடைபெற்றது. ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த…

சென்னை ஐஐடியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடியின் 58வது பட்டமளிப்பு விழா நேற்று (நவ.21) நடைபெற்றது. ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 1,962 பேர் பல்வேறு படிப்புகளில் பட்டங்கள் பெற்றனர். இதில், 399 பேர் பி.டெக்., – 379 பேர் இரட்டை பட்டப் படிப்பு, 366 பேர் எம்.டெக்., – 61 பேர் எம்.பி.ஏ., மற்றும் 311 பேர் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கான பட்டங்கள் பெற்றனர். மற்றவர்கள் ஆன்லைன் வாயிலாக பட்டம் பெற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சர்வதேச பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, “வெற்றி, தோல்வி எதுவாயினும் இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். இலக்கை அடைய ஒழுக்கமும், நேரம் தவறாமையும் மிகவும் முக்கியமானது.” என்று உரையாற்றினார்.

இதனையடுத்து மாணவர்கள் பலர் ஆன்லைன் வாயிலாக பட்டம் பெற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது அவர்கள் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக திராவிடக் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை அய்.அய்.டி. கல்வி நிறுவனத்தில் நேற்று (20.11.2021) நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்து – ‘‘நீராரும் கடலுடுத்த’’ என்ற மொழி வாழ்த்துப் பாடாமல் புறக்கணித்துள்ளனர்.
வேறு ஏதோ ஒன்று நுழைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் மொழி வாழ்த்துப் பாடப் பட வேண்டும் (அதற்கு அவையினர் எழுந்து நிற்க வேண்டும் என்பதும் மரபு) என்ற தமிழ்நாடு அரசு ஆணையை அலட்சியப்படுத்தியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகும்!” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.