அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கைகளை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புதிய அறிக்கை குறித்த தகவலை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், இந்தியாவில் செயல்படும் அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுகிறது என்றும், மேலும் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பார்க்கிறது என்றும் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வெளிநாடுகளில் போலியான நிறுவனங்களை உருவாக்கி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுகிறது என்றும் இந்த நிறுவனம் கூறியிருந்தது.
ஹிண்டன்பர்கின் அறிக்கையால் அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் , அதானி எண்டர்பிரைசர்ஸ் , அதானி பவர், அதானி வில்மார் , என்.டி.டி.வி , அதானி போர்ட்ஸ் , ஏசிசி லிமிடெட் , அம்புஜா சிமெண்ட்ஸ் உள்ளிட்ட அதானி குழுமத்தின் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்தன.
அதேபோல் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி எனப்படும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம், அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் கடும் இழப்புகளை சந்தித்தன. மொத்தமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்ததால் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிந்தது. இதனால், உலகப் பணக்காரர்களில் மூன்றாவது இடத்திலிருந்து 30வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அதானி குழுமம் 413 பக்க அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல. இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்று கூறப்பட்டது.
அதானியின் அறிக்கைக்கு பதலளித்த ஹிண்டபர்க் நிறுவனம், முக்கியமான குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தாமல் ’தேசியம்’ என்ற பெயரில் புகாரை மறைக்க அதானி குழுமம் முயற்சிக்கிறது. இந்தியா ஒரு மிகச்சிறந்த ஜனநாயக நாடு. வளர்ந்து வரும் வல்லரசு நாடாகும். ஆனால், அதானி குழுமத்தால் இந்தியாவின் வளர்ச்சி தடைபடும் என நாங்கள் நம்புகிறோம். தேசிய கொடியை போர்த்திக்கொண்டு அதானி குழுமம் நாட்டை கொள்ளையடிக்கிறது” என்று சரமாரியான குற்றச்சாட்டை முன்வைத்து.
இந்த நிலையில் ஹிண்டன்பர்கின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புதிய அறிக்கை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அந்த டிவீட்டில் “ விரைவில் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அது இன்னும் பெரிய அறிக்கையாக இருக்கும்” என வெளியிட்டுள்ளது.
யார் குறித்த அறிக்கை..? எது பற்றி இந்த அறிக்கையில் இடம்பெறும்..? எனபது குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
https://twitter.com/HindenburgRes/status/1638632636250742787







