ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ; தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல்..!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை  தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான  அவசர…

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை  தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான  அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான மசோதா நிறைவேற்றப்படது.

இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு  எதிராக  ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பின்னர்  ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த குழு  ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு தீவிர ஆய்வுக்கு பின்னர்  புதிய சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு  பரிந்துரை செய்தது.  இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் புதிய அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என கூறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாவை  திருப்பி அனுப்பியிருந்தார்.

இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சியில் தொடக்கமாக மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைந்த பாடகி வாணி ஜெயராம் ஆகியோருக்கு இரங்கள் தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து  ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா இன்று  காலை 10 மணிக்கு மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தால் கடந்த 19.10.2022 அன்று  நிறைவேற்றப்பெற்ற மற்றும் அது தொடர்பாக ஆளுநரிடமிருந்து  6.3.2023  அன்று வெளியான  நேர்முகக் கடிதம் மற்றும் குறிப்பு ஆகியவை  பேரவை முன் இன்று வைக்கப்படுகிறது. இன்று  அறிமுகம் செய்யப்படவுள்ள சட்ட முன்வடிவு, இன்றே நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கும் இன்றெ அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.