நியூசிலாந்து : கடும் புயல், மழையால் 90 விமானங்கள் ரத்து!

நியூசிலாந்தில் புயல், மழை காரணமாக 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் வடக்குத் தீவை கடுமையான புயல் தாக்கியுள்ளது. இந்த வையாணு புயல் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, 10 செ.மீ. அளவு பேய் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக வார்க்வோர்த் நகரில உள்ள மவுராகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீடுகள், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும், வடக்குத் தீவின் வக்காட்டேன் பகுதியில் 270 வீடுகளில் இருந்த 2,500 பேர் வெளியேற்றப்பட்டனர். இதுவரை நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த புயல், மழையால் 5,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளம் காரணமாகப் பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் ஏர் நியூசிலாந்து நிறுவனம் 90 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. பலத்த காற்று மற்றும் மோசமான வானிலையால், விமானச் சேவை பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வாங்கரே, பார் நார்த் மற்றும் பே ஆப் பிளெண்டி ஆகிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. புயல் தற்போது தெற்கு நோக்கி நகர்ந்து ஹாக்ஸ் பே வழியாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை புயல் மற்றும் கனமழைக்கு 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மாயமாகியுள்ளனர். தொடர்ந்து மாயமான 11 பேரை மீட்பு படையினர் தேடி வருகிறார்கள். இந்த மோசமான வானிலையால், ரயில் மற்றும் படகு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து.வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.