சென்னைக்கு புதிய‌ அமெரிக்க துணை தூதர் – கிறிஸ்டோபர் டபிள்யூ. ஹோட்ஜஸ் பொறுப்பேற்பு!

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதராக‌ கிறிஸ்டோபர் டபிள்யூ. ஹோட்ஜஸ் நேற்று பொறுப்பேற்று கொண்டார். சென்னையில் செயல்படும் அமெரிக்க துணை தூதரகத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களும் லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும்…

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதராக‌ கிறிஸ்டோபர் டபிள்யூ. ஹோட்ஜஸ் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

சென்னையில் செயல்படும் அமெரிக்க துணை தூதரகத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களும் லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் ஆகிய யூனியன் பிரதேசங்களும் உள்ளன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் இடமாற்ற முயற்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் மூத்த ஆலோசகராக பணியாற்றிய டபிள்யூ. ஹோட்ஜஸ், சென்னைக்கான அமெரிக்க துணை தூதராக பொறுப்பேற்றுள்ளார்.

இது குறித்து துணைத் தூதர் ஹோட்ஜஸ் கூறுகையில், “அமெரிக்கா-இந்தியா உறவின் அற்புதமான கால‌த்தில் தென்னிந்தியாவில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். நமது வளமான வணிக மற்றும் கல்வி உறவுகள், மற்றும் விண்வெளி ஒத்துழைப்பில் நமது இரு நாடுகளும் இணைந்து செய்து வரும் அற்புதமான பணிகள் உட்பட, நமது பரந்த இருதரப்பு கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான துடிப்பான உணர்வை நமது பணி பிரதிபலிக்கிறது. சென்னை துணைத் தூதரகத்தின் சேவைப் பகுதிகளில் உள்ள அமெரிக்க மக்கள் மற்றும் தூதரக சேவைகளை ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அரசுகள் மற்றும் மக்கள் இடையேயான‌ உறவுகளின் ஆழத்தை நமது முயற்சிகள் வெளிப்படுத்துகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் தீவுகள், மற்றும் லட்சத்தீவை உள்ளடக்கியை துணைத் தூதரகப் பகுதி முழுவதும் உறவுகளை வலுப்படுத்த நான் எதிர்நோக்குகிறேன்,” என்றார்.

சென்னையில் துணைத் தூதராக‌ பொறுப்பேற்பதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் இடமாற்ற முயற்சிகளுக்கான (CARE) ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் மூத்த ஆலோசகராக ஹோட்ஜஸ் பணியாற்றினார். அதற்கு முன்னதாக‌, அண்டை கிழக்கு விவகாரங்களுக்கான பணியகத்தில் ஒருங்கிணைப்பு உதவி, மற்றும் பத்திரிகை, பொது உறவு நய‌த்திற்கான துணை உதவி செயலாளராகவும், இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரங்களுக்கான துணை உதவி செயலாளராகவும் இருந்தார்.

ஜெருசலேம் தூதரகத்தின் துணைத் தலைமை அதிகாரியாகவும் பாலஸ்தீன விவகாரப் பிரிவின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்தது அவரது கடைசி வெளிநாட்டுப் பணியாக இருந்தது. 2000ல் வெளியுறவு சேவையில் இணைந்த அவர், ஜெருசலேம், ஹனோய், வியட்நாம்; மற்றும் அக்ரா, கானாவில் பொது விவகாரங்கள் அதிகாரியாக பணியாற்றி உள்ளார். அத்துடன் மத்திய ஐரோப்பிய விவகாரங்களுக்கான‌ அலுவலகத்தில் ஆஸ்திரியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளுக்கான துணை இயக்குந‌ராகவும் இருந்திருக்கிறார். அவரது மற்ற சுற்றுப்பயணங்களில் சுவா, பிஜி மற்றும் ஜெர்மனியின் பிராங்பேர்ட் ஆகியவை அடங்கும்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.