இந்தியா – நேபாளம் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள அயோத்தி தாம் மற்றும் நேபாளத்தில் உள்ள ஜனக்பூர் தாம் ஆகிய ஆன்மிகத் தலங்களை இணைக்கும் புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து ‘சரயு கமலா எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இந்த ரயில் சேவை மூலம் உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் நேபாளம் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து இணைப்பு மேம்படுவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மிகச் சுற்றுலாவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த நகரங்கள் வழியாகச் செல்லும்?
அயோத்தி தாம் – ஜனக்பூர் தாம் இடையே இயக்கப்படும் இந்த ரயில், கோரக்பூர், பஸ்தி, ரக்சால், சீதாமர்ஹி, மதுபானி மற்றும் ஜெய்நகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயணிகள் இரு நாடுகளுக்கும் இடையே எளிதாகப் பயணம் செய்ய முடியும். குறிப்பாக, ராமர் மற்றும் சீதையின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய ஆன்மிகத் தலங்களான அயோத்தி மற்றும் ஜனக்பூர் ஆகிய இடங்களுக்குச் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு இந்த ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பல நூற்றாண்டு கால உறவு புதுப்பிக்கும் – யோகி ஆதித்யநாத்!
அயோத்தி கேன்ட் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றுப் பேசினார். அப்போது, இந்த ரயில் சேவை அயோத்தி மற்றும் ஜனக்பூர் இடையிலான பல நூற்றாண்டு கால மத மற்றும் கலாசார உறவுகளை மீண்டும் புதுப்பிக்கும் என்று தெரிவித்தார். மேலும், “இந்த ரயில் சேவை மூலம் நேபாளத்தைச் சேர்ந்த பக்தர்கள் நேரடியாக அயோத்திக்கு வந்து ராம்லல்லாவைத் தரிசிக்க முடியும். அதேபோல், இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் ஜனக்பூர் தாமுக்குச் சென்று மாதா ஜானகியின் அருளைப் பெற முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.

அயோத்திக்கும் மிதிலைக்கும் இடையிலான தொடர்பு பல நூற்றாண்டுகளாகத் தொடரும் பாரம்பரியங்களையும் கலாசாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது என்றும், இந்த ரயில் சேவை இரு கலாசாரங்களின் புனிதமான மற்றும் புராணத் தொடர்புகளின் சங்கமமாக அமையும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்தப் புதிய ரயில் சேவை இந்தியா – நேபாளம் இடையிலான போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளின் வரலாற்று, கலாசார மற்றும் ஆன்மிக உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




