இந்தியா – நேபாளம் இடையே 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

விண்வெளித் தொழில்நுட்பம் முதல் பாதுகாப்பு வரை பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வகையில், இந்தியா – நேபாளம் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

விண்வெளித் தொழில்நுட்பம், நிர்வாகச் சீர்திருத்தம், சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, பாரம்பரிய மருத்துவம், கால்நடை மற்றும் மீன்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும்.

எந்தெந்த துறைகளில் 8 ஒப்பந்தங்கள்?

இந்தியா – நேபாளம் இடையே கையெழுத்தான 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முக்கிய விவரங்கள்:

  1. தடயவியல் அறிவியல்: குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் நேபாள காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.
  2. பாதுகாப்பு மற்றும் காவல்துறை: இந்தியாவின் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் மற்றும் நேபாள தேசிய காவல் அகாடமி இடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.
  3. நிர்வாகப் பயிற்சி: நேபாள அரசு அதிகாரிகளின் திறனை மேம்படுத்தும் வகையில், நிர்வாகப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தம்.
  4. பாரம்பரிய மருத்துவம்: ஆயுர்வேதம் மற்றும் பிற பாரம்பரிய மருத்துவ முறைகளில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம்.
  5. விண்வெளித் தொழில்நுட்பம்: தெற்காசிய செயற்கைக்கோளைப் பயன்படுத்தி செயற்கைக்கோள் தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்குவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் நேபாள தகவல் தொடர்பு அமைச்சகம் இடையே ஒப்பந்தம்.
  6. நகர்ப்புற மேம்பாடு: நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
  7. சுகாதாரம்: மருத்துவம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம்.
  8. கால்நடை மற்றும் மீன்வளம்: கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறைகளின் மேம்பாட்டுக்கான ஒப்பந்தம்.

புதிய ரயில் சேவை முதல் நீர்மின் திட்டம் வரை!

ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்து, எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அயோத்தி – ஜனக்பூர் இடையே சரயு – கமலா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பனபாசாவில் புதிய ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பைரஹவா, சுனாலி மற்றும் தோதாரா சந்தானி பகுதிகளில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தார்ச்சுலா மற்றும் நேபாளத்தின் தார்ச்சுலா இடையே புதிதாகக் கட்டப்பட்டுள்ள வாகனப் போக்குவரத்துக்கான எல்லைப்புறப் பாலமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், 669 மெகாவாட் திறன் கொண்ட லோயர் அருண் நீர்மின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மோதிஹாரி – அம்லேகஞ்ச் பெட்ரோலியக் குழாயின் இரண்டாம் கட்டப் பணிகளும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

இதனுடன், சிலிகுரி – ஜாப்பா இடையிலான முன்மொழியப்பட்ட பெட்ரோலியக் குழாய்த் திட்டத்துக்காக ஜாப்பாவில் புதிய பெட்ரோலிய முனையம் அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நேபாளத்துக்கு ரூ.24,000 கோடி வளர்ச்சித் திட்ட உதவி!

இந்தச் சந்திப்பின் முக்கிய அறிவிப்பாக, நேபாளத்தின் வெள்ளப் பாதிப்புக்குப் பிந்தைய மறுசீரமைப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ரூ.24,000 கோடி நேபாள ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்ட உதவித் தொகுப்பை இந்தியா அறிவித்துள்ளது. இருதரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய பிரதமர் மோடி, இந்தியா – நேபாளம் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தப் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், “இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளும் ஒன்றின் முன்னேற்றத்தில் மற்றொன்று பங்குதாரராக உள்ளன. கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் திகழ்கின்றன” என்று குறிப்பிட்டார்.

நேபாளத்தின் வளர்ச்சி குறித்த பாலேந்திர ஷாவின் தொலைநோக்குப் பார்வையையும் மோடி பாராட்டினார். சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் இளம் பிரதமராக அவர் ஆற்றிய உரையின் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை அறிந்துகொள்ள முடிந்ததாகவும், தற்போது நேபாளத்தின் வளர்ச்சி குறித்த அவரது தெளிவான திட்டமிடலைக் காண முடிந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த ஒப்பந்தங்கள் மற்றும் புதிய திட்டங்கள் மூலம் இந்தியா – நேபாளம் இடையிலான நட்புறவும் பொருளாதார ஒத்துழைப்பும் அடுத்தகட்டத்துக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.