புதிய வரிவிதிப்பு முறை அதிகம் கவரக்கூடியதாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மூலதன செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான தேவை, பொருளாதார ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
இந்த பட்ஜெட் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்குதல், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்துதல், வேளாண்மை துறையை மேம்படுத்துதல், சுகாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது புதிய வரி விதிப்பு முறையில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் மூலம் வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினர் பயனடைவார்கள். இந்த மாற்றங்கள் மூலம் அவர்கள் கைகளுக்கு அதிக பணம் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கான சிறு சேமிப்பு திட்டத்துக்கான வைப்பு நிதி 15 லட்ச ரூபாயிலிருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி:விஜய்யின் ‘லியோ’ – புதிய புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்
பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி 66 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சமரசம் செய்யாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.







