கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதாக ’தேர்தல் மன்னன்’ பத்மராஜன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பத்மராஜன் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு இந்த தேர்தலில் டயர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
’தேர்தல் மன்னன்’ பத்மராஜன் நமது கோவை மண்டல செய்தியாளர் பிரசாந்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: 1988-லிருந்து தேர்தலில் போட்டியிடுகிறேன். தற்போது 233-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் எனக்கு டயர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து போட்டியிடுகிறேன். தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதே எனது லட்சியம். தோல்விதான் எனது பயணம். வெற்றி என்பது நிரந்தமில்லை.
கருணாநிதி, ஜெயலலிதா, நரசிம்மராவ், ஸ்டாலின், ராகுல் காந்தி, வாஜ்பாய் உள்ளிட்ட பல பிரபலங்களை எதிர்த்து போட்டியிட்டாதால் என்னை பலமுறை கடத்தியிருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 1 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். அதிகபட்சமாக கேரளா வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டதில் 6,036 வாக்குகள் பெற்றுள்ளேன்.
அண்மைச் செய்தி:விஜய்யின் ‘லியோ’ – புதிய புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்
பலரும் நான் தேர்தலில் போட்டியிடுவதைக் கண்டு சிரித்தார்கள். ஆனாலும் தேர்தலில் தொடர்ந்து போட்டியிடுகிறேன். இனியும் போட்டியிடுவேன். இவ்வாறு பத்மராஜன் தெரிவித்துள்ளார்.







