சென்னை மடுவின்கரை பகுதியில் அமையவுள்ள புதிய கழிவுநீர் உந்து நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை மடுவின்கரை பகுதியில் அமையவுள்ள புதிய கழிவுநீர் உந்து நிலையங்களுக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிகள் நாட்டித் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளுக்காகப் போராட வேண்டிய சூழல் இருந்தது. மழைக் காலம் மட்டுமல்லாமல் எல்லா காலங்களிலும் கழிவுநீரால் இந்த பகுதி மக்கள் துன்பங்களைச் சந்தித்து வந்தனர். அதற்கு நிரந்தர தீர்வாக இந்த பகுதியில் தற்போது கழிவுநீர் உந்து சக்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதைத் தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சட்டமன்ற உறுப்பினராக நான் நன்றி கூறுகிறேன் எனத் தெரிவித்தார்.
https://twitter.com/Subramanian_ma/status/1556515201192562694
தொடர்ந்து பேசிய அவர், எனது தொகுதியான சைதாப்பேட்டையில் யாரும் நீர் நிலை புறம்போக்கில் இல்லை. நீர் நிலையை ஒட்டி உள்ள மக்கள், சட்ட ரீதியான பாதுகாப்பைத் தேடிக் கொண்டால் அகற்றப்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும் எனக் கூறினார்.








