காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று மதத்தினர் இணைந்து புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட மொளச்சூர் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் தெருவில் 700மீ தொலைவிற்கு கடந்த 4 வருடங்களாக சாலை பழுதடைந்த நிலையில் உள்ளது. ஜல்லி, கற்கள் வெளியே தெரியும் படி குண்டும் குழியுமாக இருந்துள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீபெரும்புத்தூர் ஒன்றியகுழு உறுப்பினர் ஆண்டனி வினோத்குமாரின் ஒன்றிய குழு நிதியில் இருந்து பழுதடைந்த சாலையை சீரமைக்க 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதனடிப்படையில் அந்த பகுதியில் இன்று புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களைச் சார்ந்த மூன்று குருமார்களும் இணைந்து பூமி பூஜையை செய்துள்ளனர். இதில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மதநல்லிணக்க அடிப்படையில் 3 மதத்தினரும் சேர்ந்து பூமி பூஜை செய்த நிகழ்வு அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.







